×

உள்ளாட்சி தேர்தல் வெற்றி கொடுத்த பூஸ்ட்.. விஜய்யின் அடுத்த குறி - நகரங்களிலும் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்!

 

தமிழ்நாட்டு நடிகர்கள் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ அரசியல் ஆசை அவர்களை ஆட்கொள்ளாமல் இருந்ததில்லை. நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் தொட்டு வைத்த சேனை விஜயகாந்த், கமல் என பயணித்து இன்று விஜய் வரை நீண்டிருக்கிறது. விஜய்யை எடுத்துக்கொண்டால் சினிமாவிலேயே எம்ஜிஆரை தான் பின்பற்றுகிறார். தன்னுடைய பல படங்களில் எம்ஜிஆர் ரெபரென்ஸ் வைத்திருப்பதே அதற்கு சாட்சி. தற்போது அரசியலிலும் அவரது ரூட்டை பிடித்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் எப்போதுமே உள்ளாட்சியின் வார்டுகளிலிருந்து தான் ஆரம்பிக்கும்.

எம்ஜிஆர் என்ற நாயக பிம்பம் இருந்தாலும் உள்ளாட்சியில் பலப்படுத்தியதால் தான் அவர் ஆரம்பித்த அதிமுக தமிழ்நாடு முழுவதும் வெற்றியை உரித்தாக்கியது. இதை விஜய் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டார் என தெரிகிறது. சினிமாவை தாண்டி அரசியலிலும் எம்ஜிஆரை மானசீக குருவாக விஜய் ஏற்றுக்கொண்டாரா என தோன்றாமல் இல்லை. கமல் கூட மக்களவை, சட்டப்பேரவை என பெரிய தேர்தல்களிலேயே களமாடினார். ஆனால் இவரின் விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி வார்டுகளிலிருந்து வெற்றிக்கணக்கை துவக்கியிருக்கிறது. அரசியலின் வேரை தேடி ஓடுகிறார் நடிகர் விஜய்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. யாருமே எதிர்பாராமல் சர்ப்ரைஸ் என்ட்ரியாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். அவர்கள் பெரிய கவுன்சிலர் பதவிக்கலாம் போட்டியிட ஆசைப்படவில்லை. கிராம வார்டுகளில் தான் போட்டியிட்டார்கள். இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் சென்னை ஜார்ஜ் கோட்டைக்குச் செல்லக்கூடிய அஸ்திவாரமாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றார்கள்.

இது நடிகர் விஜய்க்கு எக்ஸ்ட்ராவாக பூஸ்ட் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் வெற்றிபெற்றவர்களை அழைத்து பார்ட்டி கொடுத்தார். அதுதொடர்பாக வெளியான புகைப்படம் இணையத்திற்கு காய்ச்சலை ஏற்படுத்தியது. தற்போது அடுத்த அதிரடியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்குகிறது விஜய் மக்கள் இயக்கம். நேற்று தான் தேர்தல் தேதி வெளியானது. இன்று இந்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. தேதி அறிவிக்கும் முன்னரே மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பல்வேறு இடங்களில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். விஜய்யிடம் இருந்தும் சிக்னல் வேற படைப் பரிவாரங்களோடு தயாராகிறது விஜய் மக்கள் இயக்கம்.