×

"களத்தில் இறங்கினோம்; உண்மை என்ன தெரியுமா?" - முதல்வருக்கு விஜயகாந்த் திடீர் கடிதம்!

 

திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டடம் நேற்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 24 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. கட்டடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதைப் பார்த்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கினர். இதனால் உயிர் சேதங்களும் காயங்களும் தவிர்க்கப்பட்டன. இதையடுத்து வேதனை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமும், மாற்று இடமும் வழங்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதலமைச்சருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், "இடிந்து விழுந்த வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால் நிர்க்கதியாக நிற்கும் மக்கள், தற்போது அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இருப்பினும் வீடுகளை இழந்த மக்கள் அனைவரும், கூலித் தொழிலாளர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

எனவே திருவொற்றியூர் பகுதியிலேயே அவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித்தர தமிழக அரசு முன்வரவேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு வாடகைக்கு வீடுகளை எடுத்து அவர்களை குடியமர்த்த வேண்டும். மேலும், தேமுதிக சார்பில் களத்தில் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் உண்மை நிலை பற்றி கேட்டறிந்தோம். எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.