இதை பார்த்த தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சி
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிரேமலதாவுக்கு கட்சியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அன்று பிரேமலதா சொன்னதை இன்று விஜயகாந்த் உடல்நிலையை நேரடியாக பார்த்த கட்சியினர் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பதாகவும் அதனால் விரைவில் பிரேமலதாவுக்கு தேமுதிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், விஜயகாந்தின் உடல்நிலை பற்றி பிரேமலதா வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதை அடுத்து மாவட்ட செயலாளர்கள் அனைவரும், நீங்களே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்து வரும் விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வருவதாக தகவல் பறக்க, கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அலுவலகத்தில் குவிந்தனர்.
விஜயகாந்த் தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தார். தொண்டர்களும் நிர்வாகிகளும் தூரத்தில் நின்றபடியே அவருக்கு கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி சென்றனர். கேப்டன் கேப்டன் என்று உரக்க குரல் கொடுத்து சென்றனர்.
விஜயகாந்த் கைகளை அசைப்பதும், கீழே இறக்குவதுமாக இருந்தார். சில சமயங்களில் விஜயகாந்த் தலை முன்னும் பின்னும் சாய பின்னால் நின்று கொண்டிருந்த அவரது மகன் கவனமாக பிடித்துக் கொண்டார். இதை பார்த்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்தின் உடல்நிலையை நேரிலேயே தொண்டர்களும் நிர்வாகிகளும் பார்த்துவிட்டதால் விரைவில் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.