×

அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன்.. - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் 

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து பேசினார். 

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.  ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை பெறாத வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது.   இதன் பின்னர் சட்டசபையில் சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் இளங்கோவன்.   வரும் இருபதாம் தேதி அன்று சட்டமன்றத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் இளங்கோவன் பங்கேற்க இருக்கிறார் .

இந்த நிலையில் இடைத் தேர்தலில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் இளங்கோவன். 

 ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்   கமல்ஹாசனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார் இளங்கோவன். 

 இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,   ‘’தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான 
ஈவிகேஎஸ் அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான செல்வபெருந்தகை அவர்களுடன் இன்று என்னை சந்தித்தார்.  எனது ஈரோடு பரப்புரைக்காக நன்றி தெரிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன்’’என்று பதிவிட்டு இருக்கிறார்.