அதற்கு நாங்கள் தயார்! இதற்கு நீங்கள் தயாரா? அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்
குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் 29 ஆயிரம் ரூபாய் மொத்தமாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதற்கு , அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார். அதை கணக்கிட்டு வழங்க நீங்கள் தயாரா என்று கேட்டிருக்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
அப்போது , குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த திட்டத்தை டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தனிக்குழு கொண்டு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆராய அறிவுறுத்தி இருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியாவிற்கு முன்னோடி தலைவராக விளங்குகிறார் ஸ்டாலின்.
குடும்பத்தலைவிக்கு உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் அண்ணாமலையோ, குடும்பத்தலைவி உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் வழங்கும்போது 29 ஆயிரம் ரூபாயாக மொத்தமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதேநேரம், நபர் ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னாரே மோடி. அதை கணக்கிட்டு நீங்கள் வழங்கினால் தமிழக முதல்வர் ஸ்டாலினும் 29 ஆயிரத்தை வழங்குவார் . அதற்கு நீங்கள் தயாரா? என்று சவால் விட்டு இருக்கிறார்.