நாங்கள் ரிட்டெயர் ஆகிவிடுவோம்; இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறோம்...செல்லூர் ராஜூ உருக்கம்
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், திமுகவின் தில்லுமுல்லுகளை தகவல் தொழில்நுட்ப அணிதான் கவர் செய்ய வேண்டும் என்று சொன்னவர், தற்போது மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது. இந்த கட்சியை தலைமை தாங்கி நடத்த போவது நீங்கள் தான். நாங்கள் ரிட்டெயர் ஆகிவிடுவோம். இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறோம். அதற்கு பிறகு நீங்கள் தான் கட்சியை நடத்த போகிறீர்கள் என்று உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவை ஆட்சியில் ஏன் அமர வைத்தோம் என்று மக்கள் தற்போது சந்திக்கும் அளவிற்கு நாம் பலமான சக்தியாக வளர்ந்து இருக்கிறோம். அதற்கு காரணம் ஓபிஎஸ் இபிஎஸ் செயல்பாடுதான்.
கட்சித் தலைவரின் மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதை தருகின்றார்கள். நிர்வாகத் திறமை இல்லாதவர் ஸ்டாலின். நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது. அதனால் தான் பொங்கல் தொகுப்பில் இத்தனை குளறுபடிகள் நடந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று முதல் தொகுப்பை கூட சிறப்பாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் முதல்வரிடம் இல்லாமல் போய்விட்டது.
திமுக விடியல் அரசு கிடையாது விளம்பர அரசு. சட்டமன்றத்தில் தன்னை புகழ வேண்டாம் என சொல்லிவிட்டு தன் மகனை புகழ்வதை விரும்புகிறார் ஸ்டாலின் என்று முதல்வர் ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.