ஜி ஸ்கொயருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன உறவு? மாஜி அமைச்சர் விளக்கம்
ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்துபவர் யார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். அவருக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் என்ன உறவு என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்கிறார் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் தாம்பரம் சானடோரியம் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அதிமுக செய்தி தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது , அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட்டிருப்பது குறித்த கேள்விக்கு, இது தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக சர்க்காரிய ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களை செய்த ஒரு ஊழல் கட்சி என்பது அனைவரும் அறிந்தது தான். இத்தனை கோடி அளவிற்கு திமுகவினர் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இதன் தாக்கம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றவர், ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்துபவர் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அவருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன உறவு என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்கிறார்.
திருச்சியில் ஓபிஎஸ் நடத்த போகும் மாநாடு குறித்த கேள்விக்கு, அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை . அதிமுக மிகப்பெரிய மாநாட்டை நடத்தும் என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் பணி குறித்த கேள்விக்கு , கர்நாடகா மாநிலத்தில் அதிமுக தனது தேர்தல் பணியை செம்மையுடன் நடத்தும். அதிமுகவுக்கு ஏற்கனவே செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொன்னதே திமுக அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, குடும்ப தேவைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் செப்டம்பர் மாதத்தில் தருவதாக சொல்கிறார்கள். அப்படி தந்தாலும் கூட மீதித் தொகை 29 ஆயிரம் தர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.