கனிமொழியும் சல்மாவும் மதுப்போத்தலை வீசியபோது எங்கே போனீங்க? நாதக
இந்த வீடியோவில் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு செய்திருக்கிறார்கள். முதல்வரை, நிதியமைச்சரை அவமானப்படுத்துவதாக நினைத்து வறுமைக்கோட்டிற்குள் வரும் பெண்களை அசிங்கப்படுத்தும் இவனை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் திமுக செய்தி தொடர்பாளரும் கவிஞருமான சல்மா.
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர் . தமிழக அரசின் இந்த அறிவிப்பை கிண்டலடிக்கும் விதமாக நடிகர்கள் கவுண்டமணி -செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் தளத்தில் அக்கவுண்டை வைத்திருக்கும் பிரதீப் வெளியிட்டு இருந்தார். இதற்குத்தான் சல்மா அவ்வாறு ஆவேப்பட்டுள்ளார். கனிமொழி எம்பியும் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், அக்கா காளியம்மாளும், நானும் பங்கேற்ற சித்தமல்லி பொதுக்கூட்டத்தில் ரகளை செய்தது திமுகவின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் அல்லக்கைகள். அக்கா காளியம்மாள் அவர்களை ஆபாசமாகப் பேசி, மதுப்போத்தலை எடுத்து மேடை நோக்கி வீசியபோது கனிமொழி எம்பியும், சல்மாவும் எங்கே போனீங்க? என்று கேட்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி அன்று நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஏன் எதற்கு ? விளக்க பொதுக்கூட்டம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது . இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பங்கேற்று பேசினார் . அவர் மேடையில் திமுகவை விமர்சனம் செய்து பேசிய போது, அந்த பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த திமுகவினர் பொதுக்கூட்ட மேடைக்கு நோக்கி ஆவேசமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனாலும் ஆவேசமாக மேடையில் காளியம்மாளை நோக்கி மது பாட்டில்களை தூக்கி வீசினர். மேடையில் சுற்றி நின்று காளியம்மாள் மீது பாட்டில்கள் விழாதபடி காத்து நின்று இருக்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள். இதிலிருந்து தப்பித்த காளியம்மாள் அந்த மது பாட்டிலை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, திமுகவினர் இப்படி அநாகரிகமாக செயல்படுகின்றார்களே, பெண்ணியம் பற்றி பேசும் ஒரு கட்சியில் இருந்து.. பெண்ணுரிமை பற்றி பேசும் ஒரு கட்சி இருந்து இப்படியா திமுகவினர் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள் என்று ஆவேசப்பட்டார்.
என் மேல் சிறு கீறல் விழுந்தாலோ என் கட்சியினருக்கு ஏதும் ஆனாலும் அதற்கு திமுகவும் காவல்துறையும் தான் பொறுப்பு என்று ஆவேசப்பட்டார். காளியம்மாள் மது பாட்டில் வீசப்பட்டதை அடுத்து காளியம்மாளை சுற்றி நாம் தமிழர் கட்சியினர் பாதுகாப்பாக நின்று கொண்டனர். ஆவேசமாக இருந்த திமுகவினரை அங்கிருந்த ஒரு கடைக்குள் போலீசார் இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள். அதன் பின்னர் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடந்தது.
காளியம்மாளை ஆவேசமாக திட்டிக்கொண்டு செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மேடையை நோக்கி திமுகவினர் பாய்ந்து வந்ததால் பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் ஆவேசமாக பாய்ந்தார்கள். அப்போது மேடையில் இருந்த நாம் கட்சி நிர்வாகிகள் வேண்டாம் வந்து விடுங்கள் போலீஸ் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்ல நாம் தமிழர் கட்சியினர் திரும்பி விட்டனர். ஆனால் கடைசி வரைக்கும் திமுகவினர் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்தின் போது கண்டனம் தெரிவிக்காத கனிமொழி எம்பியும் சல்மாவும் இப்போது கண்டனம் தெரிவிக்கிறார்களே என்று கேட்டிருக்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.