×

"படப்பை" குணாவுக்கு சுத்து போடும் போலீஸ்.. பதறும் பாஜக தலைகள்; ஆளுநருடன் அவசர மீட்டிங் - பின்னணி என்ன?

 

எங்கெல்லாம் தொழில் நிறுவனங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் ரவுடிகளும் உருவாகிறார்கள். சின்ன ரவுடிகளாக இருக்கும் அவர்கள் தொழில் நிறுவனங்களை மிரட்டி மாமூல் வாங்கி, பெரிய காசை பார்த்தவுடன் பத்து பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு பெரிய தாதாக்களாக மாறிவிடுகின்றனர். வேறு வழியில்லாமல் தொழில் நிறுவனங்களும் மாமூல் கொடுத்து பிரச்சினைகள் வரமால் சமாளிக்கின்றன. ஆனால் ஒருசில நிறுவனங்கள் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் எதிர்த்து நின்றால், ஊழியர்களைப் பிடித்து அடிப்பது, நிறுவனத்தின் பேருந்துகளைச் சேதப்படுத்துவது என அட்டூழியத்தில் ஈடுபடுகிறார்கள் தாதாக்களின் அடிபொடிகள்.

அப்படியான ஒருவர் தான் படப்பை குணா. இவர் படப்பை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். தனக்கு கீழ் செயல்படும் கிளை ரவுடிகளைக் கொண்டு மிரட்டி அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பெரும் பணத்தை சுருட்டி வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளன. ஆனாலும் இவருடைய கொட்டம் அடங்கியபாடில்லை.

இதற்கு முடிவுகட்ட நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து அரசிடம் முறையிட்டன. படப்பை குணாவின் ரவுடியிசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தொழில் செய்ய முடியாது என அழாத குறையாக மன்றாட, காவல் துறையை களமிறக்கியது அரசு. அதன் ஒருபகுதியாக தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை காவல் துறை தலைமை வரவழைத்தது. அவர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து படப்பை குணா, அவருடைய ஆதரவாளர்கள் என பலரையும் கைதுசெய்யும் டாஸ்க் வெள்ளத்துரையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து படப்பை குணா தலைமறைவானார்.

அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாளை வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை கைது செய்தது. தலைமறைவாகியுள்ள குணாவை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லம்மாள் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய கணவரை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டிருப்பதாக முறையிட்டார். ஆனால் காவல் துறை மறுக்கவே அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இச்சூழலில் படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று இன்ஸ்பெக்டர்களை இடமாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தெற்கு மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம், மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க கைது செய்யப்படும் முன்னர் எல்லம்மாளை  பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் சந்தித்தார். எல்லம்மாள் சுயேச்சை வார்டு கவுன்சிலராக இருப்பதால் திமுக அரசுக்கு எதிராக இருக்கும் பாஜகவில் இணைந்தால் அனைத்தில் இருந்தும் தப்பிவிடலாம் என நினைத்திருக்கிறார்.