×

 இதை ஏன் தேசிய செய்தியாக்கவில்லை? அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி

 

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு,   திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன்கள், உறவினர்கள் உள்பட ஒன்பது பேரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த விவகாரத்தை பாஜக இவ்வளவு பெரிதாக எடுத்துச்செல்லும் நிலையில், ஏன்    ஆரணி முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் சரண் அடைந்த விவகாரத்தை பெரிதாக்கவில்லை என்று கேட்கிறார் காயத்ரி ரகுராம்.  

 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி விஏகே நகரில் வசித்தவர் வெற்றிவேல் .  முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி ரேவதி. வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் உடன் ரேவதிக்கு கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது.  இதை அறிந்த வெற்றி வேல் மனைவியை கண்டித்து இருக்கிறார்.   இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 ரேவதிக்கும் வெற்றிவேலுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால் ரேவதி குழந்தைகளுடன் ஒண்ணுபுரம் பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார்.  இந்த நிலையில் வெற்றிவேல் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்திருக்கிறார்.  அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை  ரேவதி பார்க்க சென்றிருக்கிறார்.

 அன்று இரவு அவர் அங்கேயே தங்கியிருக்கிறார்.   அதிகாலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார்.  இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் ரேவதி மீதி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.   போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் நாகராஜ் உட்பட இரண்டு பேருடன் சேர்ந்து வெற்றி வேலை கொலை செய்ததை சொல்லி இருக்கிறார்.

 இதை எடுத்து இரண்டு பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் போலீசார் .  கம்சமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்ட பட்டியல் அணி பாஜக பொதுச்செயலாளர் ராஜேஷ் .  இவர் இந்த கொலை வழக்கில் வேலூர் ஜோடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 வெற்றிவேலை  கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர்.  அதன்படி பாஜக பிரமுகர் ராஜேஷ் என்பவரை அணுகி பத்து லட்சம் ரூபாய் அவரிடம் பேரம் பேசி அட்வான்ஸ் ஆக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.   மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்த  வெற்றிவேலின் கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தி இருக்கிறார். பின்னர் கணவரின் கால்களை மனைவி ரேவதி பிடித்துக் கொண்ட போது,  ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்திருக்கிறார். இதனால் ரேவதி ,  கள்ளக்காதலன் நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ராணுவ வீரர் பிரபு மரணத்தில் குரல் எழுப்பும் அண்ணாமலை ஏன் இந்த ராஜேஷ் விசயத்தில் குரல் எழுபவில்லை என்று கேட்கிறார் காயத்ரி ரகுராம்.

அவர், ’’அண்ணாமலை, மக்கள் கேட்கிறார்கள்.. இதற்கு ஏன் மௌனம் காத்தீர்கள்? இதை ஏன் தேசிய செய்தியாக்கவில்லை? இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரணியில் நடந்தது. நியாயமான கேள்வி இல்லையா? உங்கள் குப்பைகளை மறைக்க மற்றவர்கள் மீது குப்பைகளை வீசாதீர்கள். இராணுவத்தினரைக் கொன்றவர்கள் தேச விரோதிகள் தான்’’என்கிறார்.