×

முதல்வர் குடும்பத்தை கடுமையாக விமர்சித்த முத்துராமனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

 

 முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.  திமுக எம்பி செந்தில்குமார் இந்த வீடியோவில் பேசி இருப்பவர் ஊர், பெயர் விவரங்களை தெரிவிக்கவும் என்று தனது டுவிட்டரில் எழுதியிருந்தார்.

 இதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்தவர் முத்துராமன் என்பது தெரியவந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 கடந்த மாதம் 22ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் முத்துராமன் பங்கேற்றுப் பேசிய போதுதான் முதல்வரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாக முரளிதரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன .

இதையடுத்து முத்துராமன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்,  தன்னை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். 

 கடந்த விசாரணையின் போது நீதிமன்றம் அறிவுறுத்தியபடி அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பொது இடத்திலோ பொதுக்கூட்டங்களிலோ பேச மாட்டேன் இரு பிரிவினருக்கு இடையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையிலும் பேச மாட்டேன் என உறுதியளித்து முத்துராமன் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

 இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.