×

மின்சாரம் இலவசம் என்று பேசுபவர்கள், உத்தர பிரதேசத்தை இருட்டில் வைத்தனர்.. அகிலேஷை தாக்கிய யோகி 

 

மின்சாரம் இலவசம் என்று பேசுபவர்கள், உத்தர பிரதேசத்தை இருட்டில் வைத்திருந்தனர் என அகிலேஷ் யாதவை முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக தாக்கினார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தலில் வெற்றி பெற்று சமாஜ்வாடி அரசாங்கம் அமைந்தால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு நீர் பாசனம் செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார். இதனை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் காசியாபாத்தில் நடந்த அறிவுஜீவிகள் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 2017க்கு முன் மின்சாரம் கிடையாது. 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிப்பவர்களிடம், தங்கள் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் இல்லாத நிலையில், எப்படி இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப் போகிறீர்கள் என்று கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் டிவிட்டரில், மின்சாரம் இலவசம் என்று பேசுபவர்கள். உத்தர பிரதேசத்தை இருட்டில் வைத்தனர். அவர் (அகிலேஷ் யாதவ் ஆட்சியில்) காலத்தில் இருள் மட்டுமே இருந்தது. எஞ்சியிருந்தது கலவரம் மற்றும் ஊரடங்கு உத்தரவு மட்டுமே. நீங்கள் மின்சாரம் கொடுக்காதபோது இலவசமாக என்ன தருவீர்கள்? என்று பதிவு செய்து இருந்தார்.