×

கிழக்கு உத்தர பிரதே மக்களை சாபத்திலிருந்து பிரதமர் மோடி விடுவித்துள்ளார்... யோகி ஆதித்யநாத் 

 

சரயு நஹர் தேசிய திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கிழக்கு உத்தர பிரதேச மக்களை சாபத்திலிருந்து பிரதமர் மோடி விடுவித்துள்ளார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி பேசினார்.

உத்தர பிரதேசம் பல்ராம்பூர் பகுதியில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா, ரோகினி ஆகிய 5 நதிகளை இணைக்கும் சரயு நஹர் தேசிய நீர்பாசன திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கிழக்கு உத்தர பிரதேசம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால், வறுமையும், பின்தங்கிய நிலையும் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி இங்குள்ள சாபத்திலிருந்து மக்களை விடுவித்துள்ளார். பாசனத்துக்கு தண்ணீர் வரும் என்று கனவிலும் நினைக்காத பகுதிகளில், சரயு கால்வாய் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வரலாற்றுப் பரிசு கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகளின் கனவுகள் நனவாகியுள்ளன. 

சரயு கால்வாய் திட்டத்துக்கு 1972ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து திட்டத்தை முடிக்க முடியவில்லை. காரணம் அப்போதைய அரசுகள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, சமாஜ்வாடி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதன் விளைவாக 40 ஆண்டுகளில் திட்டம் பாதி கூட முடிக்கப்படவில்லை. நான் பிறந்த 1972ம் ஆண்டு சரயு நஹர் தேசிய திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. நான் வளர்ந்தேன். ஆனால் அது ஒரு போதும் நிறைவேறவில்லை. 

நாங்கள் டிசம்பர் 7ம் தேதி ரூ.10 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கினோம். மேலும் சித்தார்த்நகரில் ஒன்பது மருத்துவ கல்லூரிகளையும், குஷிநகரில் ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் தொடங்கி வைத்தோம். உத்தர பிரதேசத்தில் 18 திட்டங்களில் 17 முடிவடைந்துள்ளன. இதன் மூலம் உத்தர பிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களின் கிட்டத்தட்ட 15 லட்சம் ஹெக்டேர் நிலம் இப்போது பாசனத்துக்கு சிறந்த வழியை கண்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.