×

சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆட்சி  காலத்தில் கொரோனா கிடையாது ஆனால் ஊரடங்கு  இருந்தது.. யோகி ஆதித்யநாத் கிண்டல்

 

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆட்சி காலத்தில் கொரோனா கிடையாது ஆனால் ஊரடங்கு உத்தரவு இருந்தது என்று அந்த அரசாங்கங்களின் காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்தது என்பதை கிண்டலாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: முன்பு காஜியாபாத்தில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. கைலாஷ் மானசரோவர் பவனை எங்கள் அரசு கட்டியது. முன்பு வியாபாரிகளை துன்புறுத்திய மாபியா, இப்போது எந்த ஒரு வியாபாரி, மருத்துவர் அல்லது ஏழையின் சொத்தை அபகரிக்க எந்த மாபியாவும் துணிவதில்லை. கடந்த காலங்களில் ஏழைகளுக்கான ரேஷன் அவர்களை சென்றடையவில்லை. அது உணவு தானிய மாபியா மூலம் வங்கதேசத்துக்கு செல்லும். 

ஆனால் இன்று ஏழைகளுக்கு உணவு தானியங்கள் சென்றடைந்து 15 கோடி மக்களுக்கு கிடைத்துள்ளது. இரட்டை என்ஜின் அரசாங்கம் (மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகள்) இரட்டை டோஸ் உணவு தானியங்களை கிடைக்க செய்கிறது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அரசாங்கங்களின்போது கொரோனா வைரஸ் இல்லை. ஆனால் ஊரடங்கு கண்டிப்பாக விதிக்கப்பட்டது. நம்  காலத்தில் கொரோனா உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு இல்லை. பொதுவாழ்க்கை இயல்பானது. 

2017க்கு முன் மேற்கு உத்தர பிரசேதத்தின் நிலைமை என்ன? ஒரு சூழ்நிலை இருந்தது. எங்கும் அச்சம், சில இடங்களில் மாலையில் ஊரடங்கு உத்தரவு போன்ற சூழல் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.