வனத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை இன்று தாக்கல்!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 14 ஆம் தேதி வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீது விவாதம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி அமைச்சர் ராமச்சந்திரன் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி அமைச்சர் மெய்யநாதன் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி முடிவடையும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 21 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.