×

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரம்- வினேஷ் போகத்துக்கு மீண்டும் அதிர்ச்சி

 

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலியே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து தொடர்களில் பதக்கங்களை வென்று, தனது இல்லத்தையே பதக்கங்களால் அலங்கரித்தார். இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ், தங்கப்பதக்கத்தை முத்தமிட காத்திருந்தார். ஆனால் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி 'திடீர்' தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வினேஷ் போகத் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கக்கோரி தொடர்ந்த மனுவை மூன்றாவது முறையாக மீண்டும் விளையாட்டுக்கான சர்வதேச தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.