×

46 ரன்களில் ஆல் அவுட்.. மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி..!

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 46 ரண்களில் சுருண்டது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி,  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்றது.  முன்னதாக நேற்று காலை 9.30  மணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்த நிலையில், பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக  அறிவிக்கப்பட்டது.  இதனால் இன்று  2வது நாள் ஆட்டம் தொடங்கி போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில்,  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,  ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி டக் அவுட்  ஆகி ஏமாற்றம் கொடுத்தார். அதன் பின்னர் வந்த சர்பாராஸ் கானும் ரன்  எதுவும் எடுக்காமலேயே ஆட்டம் இழந்தார்.  பின்னர்  ஜெய்ஸ்வால் - ரிஷப் பண்ட்  ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர்.  ஆனாலும் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

இவர்களை தொடர்ந்து வந்த கே.எல்.ராகுல்,  ஜடேஜா,  அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்த டக் அவுட்டாகி வெளியேறினர்.  மறுபடியும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்டும் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதனால் இந்திய அணி 31.2 ஓவர்களில் 10 விக்கட்டுகளையும் இழந்து 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்றி 5  விக்கெட்டுகளையும்,  வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளையும்,  சவுதி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் மிகக் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது  இந்திய அணிக்கு இதுவே முதல் முறையாகும். இது மிகவும் மோசமான பேட்டிங் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.