×

உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா தான் - கவுதம் கம்பீர்

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் வியூகங்களை சிறப்பாக கட்டமைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.அஸ்வின் குல்தீப் இருவரும் முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய மைதானங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும். வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்கள், இளைய வீரர்கள் என அனைவரிடமும் சுமூகமான உறவில் தான் இருக்கிறேன். இது அணியின் வெற்றிக்கு முக்கியமானது.

எப்பவும் பேட்ஸ்மேன்களை பற்றியே கேள்வி கேட்கப்படும், பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியே. பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள். பும்ரா  நல்ல ஃபார்மில் உள்ளார், டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம். பும்ராவால் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் மாற்றற்றை ஏற்படுத்த முடியும்.  மூன்று வகை கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் - பும்ரா தான். இதில் சிறந்த விஷயம், தன்னால் முடிந்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார்: 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்தால் வேகப்பந்துவீச்சாளர்களை பற்றி விமர்ச்சனம் செய்வதில்லை ஆனால் இந்தியாவில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் முடிந்தால் சுழற்பந்துவீச்சாளர்களை விமர்சிக்கிறோம், மைதானத்தை விமர்சிக்கிறோம், இது தவறான அணுகுமுறை..” என்றார்.