×

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி.. குவியும் வாழ்த்துகள்..!!

 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 தங்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.  இதில் இந்தியா சார்பில்  ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரஜ்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும்,  அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் பங்கேற்றது.  இதில் ஆடவர் பிரிவில்  11 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.  

செஸ் ஒலிமியாட் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த  2014 மற்றும் 2022-ம் ஆண்டுகளில்  இந்தியா வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.   இதேபோல் இந்திய மகளிர் அணியும் இந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறது.  இந்திய மகளிர் அணி கடைசி சுற்றில்  3.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்து,  19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. 

 இதில் திவ்யா, வந்திகா, ஹரிகா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இந்திய மகளிர் அணிக்கும் இது முதல் தங்கமாகும். இதற்கு முன்னதாக இந்திய அணி கடந்த 2022ல் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.   45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.