பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா..
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் ஜோப்ரா கலந்துகொண்டார். 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் அவர் தங்கம் வென்றதை தொடர்ந்து அவர் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தது.
இந்நிலையில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நீரஜ் சோப்ரா வென்றுள்ள 2வது பதக்கம் இதுவாகும். அத்துடன் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கமாகும்.
அதேநேரம் பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்து, தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்கிற மாபெரும் பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். மேலும் 1948ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.