×

பாராலிம்பிக்- உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நிஷாத் குமார்

 

பாராலிம்பிக்ஸ் 2024ல் ஆடவர் உயரம் தாண்டுதல் T47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


இமாச்சலப் பிரதேசத்தின் உனாவ்-வைச் சேர்ந்த நிஷாத் குமார், பாரா ஒலிம்பிக் போட்டியில் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ஆறு வயதில் புல் வெட்டும் இயந்திரத்தில் வலது கையை இழந்த நிஷாத், தனது தடகள வாழ்க்கையைத் தொடங்கினார். 2017-ம் ஆண்டில், அவர் தொழில்முறை பயிற்சியைப் பெற்றதுடன் ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவில் அறிமுகமானார், அங்கு அவர் தங்கப் பதக்கம் வென்றார். நிஷாத் சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் கல்வியை முடித்தார். பின்னர் இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியும் படித்தார்.

2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், நிஷாத் குமார் முதன்முதலில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் உயரம் தாண்டுதல் T47 பிரிவில் ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். நிஷாத்தின் வெற்றி, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்தது, அங்கு அவர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார், 2023 இல் ஆசிய சாதனை படைத்தார். முன்னதாக 2019-ம் ஆண்டில் உலக பாரா தடகளத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இது தவிர, அவர் 2022-ல் IWAS உலக பாரா விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.