வீரர்களுக்கு கொரோனா… ஐபிஎல் நடக்குமா? – சவால்களை வென்ற பிசிசிஐயின் வரலாறு சொல்லும் பாடம் என்ன?
ஐபிஎல் 2021 சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்து விட்டது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எட்டு அணி வீரர்களும் களத்தில் இறங்கி பயிற்சி செய்துவருகிறார்கள். தொடர் நெருங்கிவரும் இவ்வேளையில் தான் கொரோனா மீண்டும் கோர தாண்டவத்தை ஆரம்பித்திருக்கிறது.
குறிப்பாக, அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. போலவே அணி நிர்வாகிகளும், மைதான ஊழியர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பிசிசிஐக்கு நிச்சயம் பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதனால் ஐபிஎல் தொடர் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் வலுக்கிறது. முதற்கட்டமாக பார்வையாளர்களின்றியே இம்முறையும் போட்டி நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது. கூடவே வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா என்றும் பரிசீலித்துவருகிறது.
இப்படியான சோதனைக்குள் பிசிசிஐ மூழ்கி தவிக்கிறது. ஆனால் சோதனைகளைச் சாதனையாக்குவதே பிசிசிஐயின் ஸ்பெஷாலிட்டி. வரலாறு சொல்லும் பாடமும் அதுவே. இந்தாண்டுக்கான சோதனை இப்போது வரவில்லை ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. ஒன்றுமில்லை டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் நடக்கிறது. இதனால் அங்குள்ள மைதானங்களில் போட்டி நடத்த முடியாத நிலை.
எங்கள் ஹோம் ஹிரவுண்டில் எங்களுக்கு ஆட அனுமதியில்லையா என ராஜஸ்தானும், பஞ்சாப்பும் போர்க்கொடி தூக்கின. இவ்விவகாரத்தைச் சாதுர்யமாகக் கையாண்ட பிசிசிஐ, எந்த அணிக்குமே ஹோம் ஹிரவுண்ட் கிடையாது என தடாலடியாக முடிவெடுத்தது. விளைவு, சென்னை அணியின் ஹோம் கிரவுண்ட் மும்பைக்கும், மும்பை அணியின் ஹோம் ஹிரவுண்ட் சென்னை சேப்பாக்கமாகவும் மாறின. இதே மாற்றம் தான் மற்ற அணிகளுக்கும். இதுபோன்ற சவால்கள் வரும்போதெல்லாம் அதிரடி முடிவெடுத்து தொடரைக் கனக்கச்சிதமாக நடத்திமுடித்து விடும்.
ஐபிஎல் வரலாற்றில் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவுகள்:
ஐபிஎல் தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டே முதல் சோதனை வந்தது. 2009ஆம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறும் சமயம் அது. அப்போது தான் பிசிசிஐ போட்டியின் ஷெட்யூலை வெளியிட்டிருந்தது. ஐபிஎல்லின் ஷெட்யூல் அறிவிக்கப்பட்ட நாட்களில் தான் மக்களவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பாதுகாப்பு காரணம் கருதி ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வெளியிட்ட அட்டவணையின்படி அதே நாட்களில் அனைத்துப் போட்டிகளையும் நடத்திமுடித்தது பிசிசிஐ.
2014ஆம் ஆண்டும் இதே நிலை தான். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருந்தது. எப்படியும் அனுமதி கிடைக்காது என்ற முன்முடிவும், இவ்விவகாரத்தை ஏற்கெனவே கையாண்ட அனுபவமும் கைகொடுக்க ஐக்கிய அமீரகத்தில் முதல் பாதி தொடரை பிசிசிஐ நடத்தியது. அடுத்த பாதி இந்தியாவில் நடைபெற்றது.
2018ஆம் ஆண்டு பிசிசிஐக்கு மட்டுமல்ல. சிஎஸ்கே அணிக்கும் சேர்த்தே சோதனை இருந்தது. காவிரி நீர் பிரச்சினையில் தமிழகமே போராட்டம் நடத்தியது. இதனால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கக் கூடாது என போராட்டம் வெடித்தது. துரிதமாக முடிவெடுத்த பிசிசிஐ, சென்னை அணியின் ஹோம் ஹிரவுண்டாக புனேவை மாற்றியது. அந்த தொடரில் சிஎஸ்கே கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அடுத்ததாக 2020ஆம் ஆண்டு சவால். அதை சொல்லி தெரியவேண்டியதில்லை. கொரோனா பரவலால் அனைத்து வகை போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஐபிஎல்லும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவரையிலும் எந்த கிரிக்கெட் தொடரும் ஆரம்பிக்கப்படாமல் இருக்க, செப்டம்பரில் ஐபிஎல் தொடரை மீண்டும் துபாயில் நடத்தியது பிசிசிஐ.
பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டாலும் வெற்றிகரமாக நடத்திமுடித்தது. இதுதான் பிசிசிஐயின் சாதனை வரலாறு. எந்தச் சவால்கள் வந்தாலும் அதனைத் திறம்பட முடித்துக் காட்டுவதில் பிசிசிஐக்கு நிகர் பிசிசிஐ தான். இப்போதும் கொரோனா பரவலில் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சவாலையும் வெற்றிகரமாகச் சந்தித்து சாதித்துக் காட்டும். ஐபிஎல் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்… பிசிசிஐ துணை!