×

கைகளால் எழுதிக்கொடுக்கப்படும் போர்டிங் பாஸ்... சென்னையில் 10 விமானங்கள் ரத்து

 

மைக்ரோசாப்ட்  மென்பொருள் குளறுபடியால், சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் பொருளாதாரம், தொலை தொடர்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுக்கப்படுகிறது. கவுண்டர்களில் விமான நிறுவனங்கள் கூடுதல் ஊழியர்களை நியமித்து கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை வழங்கி வருகிறது. போர்டிங் பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூரு, சிங்கப்பூர், இலங்கை, டாக்கா செல்லும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. எப்போது நிலைமை சீராகும் என்று விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் வெளியிடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானங்கள் இயக்கப்படவில்லை.


இதுதொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில், “மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம் தொடர்பாக  அந்த நிறுவனத்துடன் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பில் உள்ளது.முடக்கம் தொடர்பாக ‘CERT’ என்ற நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகிறது, மேலும் இந்த முடக்கத்தால் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தின் செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் கோளாறு காரணமாக விமானம் தாமதமாவதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்து தருமாறு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.