10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி – எல்.முருகன் பெருமிதம்..!
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ரோஜ்கர் மேளா எனும் வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற விழாக்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஐசிஎஃப் அம்பேத்கர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் 6 துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 150 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார். இதில் 91 பணியிடங்கள் அஞ்சல் துறையிலும், மற்றவை மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளவை.
நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன், “புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் அரசுத் துறைகளில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 12 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக பணியில் இணைந்துள்ளனர். மூன்றாவது முறையாக பதிவியேற்ற முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி செலவில் நாடு முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 4 கோடி குடும்பங்களுக்கு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
2047-ம் ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் உலகின் வல்லரசாக உருவாக வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை, விமானப்போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, தொழில் வழித்தடம் ஆகியவற்றில் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இதற்குப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே முழு காரணம்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ், ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.