×

நடப்பாண்டு சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு - காவல்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

 

கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு சாலை விபத்துகள்  5% குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.   போக்குவரத்து காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளால்  570 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன.  

சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர்  பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர். பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியதோடு,  சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு  வருகின்றனர்.  குறிப்பாக  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், எதிர் திசையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், ஹெல்மெட் - சீட்பெல்ட் அணியாதவர்கள், சிக்னலை மதிக்காதவர்கள், ரேசிங் செல்பவர்கள் என விதிகளை மீறுவோரை  கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் தேசிய நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து  வருகின்றனர். 

சாலை  விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் வழங்கப்படுகிறது. இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மூலம் நடப்பாண்டு சாலை விபத்துகள் 5 % குறைந்துள்ளன.  இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், “ 2024 ஆம் ஆண்டில் 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதில் 10,536 உயிரிழந்துள்ளனர். முன்னதாக 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 10,589 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 11,106 பேர் உயிரிழந்தனர்.  

சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவது குறித்து,  போக்குவரத்து காவல்துறையினரின் தீவிர  கண்காணிப்பின் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 523 சாலை விபத்து வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளது;  அதாவது 5% வழக்குகள் குறைந்துள்ளது. 5% உயிரிழப்புகள்  என்பது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது  570 உயிர்கள் சாலை விபத்துக்கள் பலியாவது  தடுக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் சில முக்கிய நடவடிக்கைகள் இன்றியமையாதவை. குறிப்பாக ஜூலை 2024 வரை அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை தாண்டி செல்பவர்கள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக சுமை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு வாகனங்கள், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் 6 லட்சத்து 66 ஆயிரத்து 721 வழக்குகள் பதிவாகியுள்ளன.  

>அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது 1,05,097 வழக்குகள்;
>சிக்னலில் சிவப்பு விளக்கை தாண்டி சென்றவர்கள் என 1 லட்சத்து 35 ஆயிரத்து 771 வழக்குகள்; 
>வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மீது 2 லட்சத்து 31,624 வழக்குகள்; 
>குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது 13,270 வழக்குகள்; 
>அதிக சுமை ஏற்றி சரக்கு வாகனங்களுக்கு 6,946 வழக்குகள்;  
>சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது பயணிகளை ஏற்றி சென்றது குறித்தான 74 ஆயிரத்து 13 வழக்குகள். 


மேலும் இரண்டு முக்கிய பிரிவுகளான இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாதவர்கள் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 39 லட்சத்து 18 ஆயிரத்து 197 வழக்குகள் பதிவாகியுள்ளன.

> தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீதான 35 லட்சத்து 78 ஆயிரத்து 763 வழக்குகள் (35,78,763 வழக்குகள்)
> சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டியவர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகள்(3,39,434 வழக்குகள்)  

இந்த வருடம் ஜூலை மாதத்தோடு மோட்டார் வாகன சட்டத்தை  மீறியதற்காக மொத்தம் 76 லட்சத்து 15 ஆயிரத்து 713 வழக்குகள் (7615713 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82 ஆயிரத்து 375 நபர்களின் (182375 நபர்கள்) ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.  மேலும் 39 ஆயிரத்து 924 ஓட்டுநர் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து காவல்துறையால் மேற்கொள்ளப்படும் ரோந்து வாகனங்கள் மூலம் பல முக்கிய விபத்துக்கள் அதிகளவில் தடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமாக 218 ரோந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சில முக்கிய பகுதிகளை உள்ளடக்கி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன..  ரோந்து வாகனங்களின் முக்கிய பணி என்பது சாலை விபத்துகளை குறைப்பது சாலை விபத்துகளில் பொன்னான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதும் ஆகும். இந்த ரோந்து  வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

2024 ஜூலை மாதம் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தலைநகரங்களில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்த 20089 நபர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக பொன்னான மணி நேரத்திற்குள் அனுப்பி விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றியுள்ளனர் மொத்தத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 14,957 பேருக்கு உதவியுள்ளன.
 
போக்குவரத்து துறை காவல் துறையினரால் பொதுமக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன குறிப்பாக சாலை விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்களிடையே 2024 ஆம் ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 44 ஆயிரத்து 48 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது இதில் 19 லட்சத்து 31,2025 பேருக்கு சாலை விழிப்புணர்வு குறித்தான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது” என்ற புள்ளி விவரங்களை தமிழ்நாடு காவள்துறை வெளியிட்டுள்ளது.