×

தொடரும் காற்று மாசுபாடு: டெல்லியில் 107 விமானங்கள் காலதாமதம்..!

 

 டெல்லியில், புகைப்பனி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் 107 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் காலதாமதம் ஏற்படும் என்றும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் நேற்று காலை முதலே பல்வேறு இடங்களிலும் புகைப்பனி படர்ந்து காணப்படுகிறது. உள்ளூரில் ஏற்பட்ட காற்று மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதில் ஏற்பட்ட காற்று மாசு ஆகியவை, டெல்லியில் கரும்புகையாக வான் வரை பரவி காணப்படுகிறது.இவை, ஏற்கனவே காற்று மாசுபாட்டால் சிக்கி தவித்து வரும் டெல்லி மக்களுக்கு பரவலாக வேதனையை ஏற்படுத்தி உள்ளன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, டெல்லியில் காற்று தர குறியீடு 428 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், நகரம் கடுமையான பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி ரெயில்வே நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, மயூர் விகார், பத்பர்கஞ்ச், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பனி படர்ந்து காணப்பட்டது. ஆனந்த் விகார், பஞ்சாபி பாக், ஆர்.கே. புரம், லோதி சாலை, ஷாதிப்பூர், வாஜிப்பூர், ஜகாங்கீர்புரி உள்ளிட்ட பகுதிகளில் காற்று தர குறியீடு கடுமையான அளவில் உள்ளது. இந்த சூழலில், விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. குறைவான தொலைவையே பார்க்கும் திறனால், ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.