×

இலங்கை சிறையில் இருந்து 13 தமிழக மீனவர்கள் விடுவிப்பு.. 

 

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். 

 தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 13 மீனவர்கள் இருவேறு தினங்களில் கைது செய்யப்பட்டனர்.   கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்குவந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகை, சுற்றி வளைத்து கைது செய்தனர். படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதேபோல்  கடந்த ஜூலை 12 ஆம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அதோடு ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்து, படகுகள், வலைகள், மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  

மொத்தமாக 3 படகுகளை பறிமுதல் செய்ததோடு, 13 மீனவர்களை இலங்கை கடற்படை  கைது செய்து  சிறையில் அடைத்த சம்பவம், தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து  ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவசர கடிதம் எழுதி, மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், புதுக்கோட்டை ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும் விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் . பின்னர் தூதரக அதிகாரிகள், விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து ,  13 மீனவர்களையும்  இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த  மீனவர்களை  தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,  அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.