×

சிறையிலிருந்து ரிலீஸ் ஆன 4 நாட்களில் 16 இடங்களில் கைவரிசை! உல்லாச கொள்ளையனின் பின்னணி

 

சிறையிலிருந்து ரிலீஸ் ஆன 4 நாட்களில் 16 இடங்களில் கைவரிசை காட்டிய உல்லாச கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.


சென்னை தியாகராய நகர் நியூபோக் சாலையில் வசிக்கும்  வயதான தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு போனதாக மாம்பலம் காவல் நிலையத்துக்கு  புகார் வந்தது. அதன் பேரில் மாம்பலம் தனிப்படை போலீசார்,  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பிரபல கொள்ளையன் நெமிலிச்சேரி வினோத் (27) குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து இரு சக்கர வாகனம், லேப்டாப், 8 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட வினோத் குமார் மீது சென்னை குமரன் நகர், சைதாப்பேட்டை என பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 10 வழக்குகள் உள்ளன.

கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஊதாரியாக மாறிய வினோத்குமார் மது, மாது பழக்கங்களுக்கு அடிமையானவர் என போலீசார் தெரிவித்தனர். பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவது, எவ்வளவு உயரமான சுவராக இருந்தாலும் ஏறி குதித்து திருடுவது ஆகியவற்றில் கைதேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். திருட்டு வழக்கில் கைதாகி  ஒன்றை ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்து கடந்த 8ம் தேதி தான் சிறையிலிருந்து வினோத் குமார் வெளியே வந்துள்ளார். முதலில் ஈக்காட்டுத்தாங்கல் சென்று அங்கு ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, ஹார்டுவேர் கடையில் சிறிய கடப்பாரை வாங்கிக்கொண்டு கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளார்.

தியாகராய நகர், சூளைமேடு நுங்கம்பாக்கம், சாஸ்திரி நகர், திருமங்கலம் , ராஜமங்கலம், புழல் என சிறையில் இருந்து வெளி வந்த 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளார். திருடிய நகை, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை விற்று மது, மாது என உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் தியாகராய நகர் பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் மீண்டும் சுற்றித்திரிந்த போது தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். தியாகராய நகர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் மாம்பலம் போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற 15 திருட்டு வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.