பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது விபரீதம்.. 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சியில் இன்று பைக்கும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியதில் 9 வயது சிறுவன், 18 வயது கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த மதுக்கூர் விக்ரமம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களது மகன் மோனிஷ் (9). இந்நிலையில் ராதிகா இன்று ஸ்கூட்டி வாகனத்தில் தனது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு பைங்காநாடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மன்னார்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்குறிச்சி அருகே வந்தபோது எதிரே மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிவந்த பைக்கும், ராதிகா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டியும் பயங்கரமாக மோதியது. இதில் மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் பைக்கில் வந்தவர் பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மகன் விக்னேஷ் (18) என்பதும், இவர் கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாகவும் தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கூர் போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.