×

தலைமறைவாக உள்ள கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

 

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதையடுத்து மறுநாளே பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, இதற்காக மன்னிப்பும் கோரினார். இருப்பினும் கூட நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரையடுத்து நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருபிரிவினர் இடையே கலகத்தை தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக கோயம்பேடு போலீசிலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரெட்டி நல சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், திருச்சி குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில் யூடியூப் சேனலில், வெளியான கஸ்தூரியின் கருத்துகள் மனதை புண் படுத்தும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இதன் பேரில் கஸ்தூரி மீது  3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்திந்திய போயர் பெண்கள் நலச் சங்கத்தின் தொழிற்சங்க நிர்வாகி விஜயலட்சுமி உப்பிலிய புரம் போலீஸ் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்து உள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.