×

23 தமிழக காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது..!

 

 சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில்  தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு  மிகச்சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். 3 பிரிவுகளில் வழங்கப்படும், இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில்  வீர, தீர செயலுக்கான விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.  மாறாக  தெலுங்கானாவை சேர்ந்த காவலர் ஒருவர் வீர தீர செயலுக்கான விருதை பெறுகிறார். எனினும், சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருதை 2 பேரும், திறம்பட சேவையாற்றிய பிரிவில் 21 பேரும் என  தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகள் விருதுகள் பெறுகின்றனர். 

அதன்படி, சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது வன்னியபெருமாள், அபின் தினேஷ் மோதக்  ஆகிய இருவருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. திறம்பட சேவையாற்றிய பிரிவில் ஐஜி கண்ணன், ஐஜி பாபு, ஆணையர் பிரவீன்குமார், எஸ்பிக்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாம்ளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் ஆகியோர் விருது பெறுகின்றனர். டி.எஸ்.பிக்கள் டில்லி பாபு, மனோகரன், சங்கு ஆகியோருக்கும்,  ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ஆய்வாளர்களில் சந்திரசேகர், சந்திரமோகன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி  மற்றும் 3 எஸ்.ஐக்களுக்கும் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறைக்கான சிறப்பு விருது தமிழகத்தைச் சேர்ந்த  கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளாட்டூர் கமாண்டர் கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பின் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.