×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு

 

கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையம் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும், கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தற்போது 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது 3 மாத குழந்தையான தஸ்விக்ராஜ் வைத்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்திருந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த தாய் காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை தஷ்விக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக 3 மாத குழந்தையை கொண்டு சென்றனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று மாத குழந்தையான தஷ்விக்ராஜிக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர். 

இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா கூறுகையில் இறந்த குழந்தைக்கு 45 நாட்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அதே தடுப்பூசி தான் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ள நிலையில் அதில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. குழந்தைக்கு நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் இந்த குழந்தைக்கு இயற்கை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இறந்து இருக்கலாமா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியும் என கூறினார்.