×

நாய் கடித்து 30 பேர் காயம்- மருத்துவமனையில் அலைமோதும் கூட்டம்

 

புதுச்சேரியில் 3 பகுதியில் நாய்கடித்து, 30 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனைக்கு, ஊசி போட அதிகளவில் மக்கள் குவிந்தனர். தொடரும் நாய்தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரி்ககை வைத்தனர்.

புதுச்சேரியில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி புகார் அளித்தால் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி நிர்வாகம் முற்றிலும் கண்டு கொள்வதில்லை. நாய்கள் கருத்தடை பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. பல ஹோட்டல்கள் எண்ணிக்கை அதிகரித்து இரவில், மீதமானவற்றை கொட்டி செல்வதும் நாய்கள் பெருக்கத்துக்கு ஓர் முக்கியக்காரணம்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்றோர், வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர். ரெட்டியார்பாளையத்திலிருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்றது மேலும் 8 பேரை கடித்தது. இதில் மொத்தமாக 15 பேர் காயமடைந்து நாய்கடி தடுப்பூசி போட்டனர். இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி அமைந்துள்ள கம்பன் கலையரங்கம் அருகே நாய் ஒன்று பலரை விரட்டி கடிக்க தொடங்கியுள்ளது. இதில் ஆறு பேர் வரை காயம் அடைந்தனர். இந்த நாய் முதலியார்பேட்டை பகுதியில் இருந்து விடப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 9 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடித்த 15 பேர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட சீட்டு போட்டு ஊசி போட்டனர்.


தொடரும் நாய்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரி்ககையை இம்முறையாவது நகராட்சி அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும் என்று நாய்கடி ஊசி போட வந்தோர் தெரிவித்தனர். சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்புவதிலும் எச்சரிக்கை அவசியம் என்றும் குறிப்பிட்டனர்.