கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு இரண்டாக பிளந்த நிலம்..! கிராம மக்கள் அதிர்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே கேரளாவை ஓட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேல்மலையில் உள்ள கடைசி கிராமமான கீழ் கிளாவரை பகுதிக்கு செருப்பின் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வருவது வழக்கம். இந்த நீரையே கிராம மக்கள் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், கீழ் கிளாவரை பகுதியில் இருந்து சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கூனிப்பட்டி என்கிற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கும் மேல் நிலம் இரண்டாக பிளந்து இருந்துள்ளது. இதனைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அங்கு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதன் காரணமாகவே 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிறவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்தது போல் இங்கும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் குடிதண்ணீர் மற்றும் வயல்வெளிகளுக்கு பாய்ச்சும் நீர் இந்த பகுதியில் இருந்து மட்டுமே வருவதாகவும், விரைந்து வந்து இப்பகுதியை ஆய்வு செய்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.