×

32,500 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்
 - துணை முதல்வர் உதயநிதி!

 

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா அபியான்) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும். அதன்படி தமிழகத்துக்கு நடப்பு கல்வியாண்டில் (2024-25) ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். அதில் முதல்கட்ட தவணையாக ரூ.573 கோடியை கடந்த ஜூனில் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய மறுப்பதால் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆசிரியர்கள், அலுவலர்கள் என சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3,586 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு ரூ.2,152 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார். ஆனாலும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் பெறப்படவில்லை.

நமது அரசு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் என்றைக்கும் அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.