×

3வதும் பெண் குழந்தை- கரு கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

 

மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் தனியார் மருத்துவமனையில் கருவை கலைக்கும் போது பெண் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சுவிடுதி கிராமத்தை சேர்ந்த பரிமிளேஸ்வரன் என்பவரது மனைவி கலைமணி(30). பெண் சுகாதார தன்னார்வலராக பணியாற்றும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கருத்தரித்து நான்கு மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறிய நேற்று முன் தினம் மாலை சென்றதாகவும், கருவில் மீண்டும் பெண் சிசு இருப்பதாக அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதால் அதனை கலைக்கும் சிகிச்சையும் மேற்கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விவாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது உயிரிழந்த கலைமணியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் சூழலில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் அதன் உரிமையாளர் அழகேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மருத்துவக் கல்லூரி அருகே முள்ளூர் விளக்கு என்னும் இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.