×

எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

 

தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகளை சிபிஐசிடி அமைத்துள்ளது.


 
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர்,  போலி சான்றிதழ் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தன்னை மிரட்டி பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கரூர் நகர போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.  இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று  புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கரூரில் ரூ .100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய 5 தனிப்படைகளை சிபிஐசிடி அமைத்துள்ளது. தமிழகத்தில் 2 தனிப்படைகளும், வெளிமாநிலத்தில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முன் ஜாமின் மனுவை நேற்று முன் தினம் கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.