சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வரும் 20ம் தேதி வரை பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம்தேதி சுந்தந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் 3.5 மணி நேரமும் முன்னதாகவே விமான நிலையம் வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இந்த 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.