×

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய கண்ணாடி- காப்பாற்றிய மருத்துவர்கள்

 

மூச்சு குழாயில் கண்ணாடி சிக்கி, மூச்சி திணறலில் பரிதவித்த குழந்தையின் உயிரை கோவை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்ட அரசாங்க தலைமை மருத்துவமனையில், அவ்வப்போது மருத்துவர்கள் அரிய நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை தந்து பல்வேறு நபர்களின் உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். சமீப நாட்களுக்கு முன்பாக அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை தந்து குணப்படுத்தினர் . இந்த நிலையில் மூச்சு திணறலால் பரிதவித்த பச்சிளம் குழந்தையை மீண்டும் ஒருமுறை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கின்றனர். 

பொள்ளாச்சியை நெகமம் பகுதி சார்ந்த ஏழு மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக நான்கு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் குழந்தைக்கு சளி அல்லது நுரையீரல் பிரச்சனைகள் ஏதேனும் இருக்குமோ என்ற கோணத்தில் சிகிச்சை தந்திருக்கின்றனர். செவிலியர்களின் தொடர் கண்காணிப்பிலும் மருத்துவர்களின் மேற்பார்வையிலும் குழந்தைக்கு சிகிச்சை தந்த நிலையில் குழந்தை குணமாகவில்லை. இந்த நிலையில் மருத்துவர்கள் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்களிடம் ஒப்பினியன் கேட்க பரிந்துரை செய்திருக்கின்றனர். அப்பொழுது நவீன கருவியை தொண்டைக்குள் செலுத்தி பார்த்த போது தொண்டை குழியில் உடைந்த கண்ணாடி துண்டு இருந்ததை பார்த்திருக்கின்றனர். 

இனி தாமதித்தால் நுரையீரல் பக்கம் சென்று குழந்தைக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என நினைத்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றனர். அதன் அடிப்படையில் நவீன கருவிகள் உதவியுடன் டீன் நிர்மலா மேற்பார்வையில் காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்குவியல் மருத்துவர்கள் கல்யாணசுந்தரம் தலைமையிலான மருத்துவ குழு இணைந்து குழந்தையின் தொண்டைக்குள் அதனை நவீன கருவிகளை செலுத்தி அந்த கண்ணாடி துண்டை 15 நிமிடத்தில் வெளியே எடுத்து இருக்கின்றனர். தொண்டையில் இருந்த கண்ணாடி துண்டின் அளவு 2 CM. தவழும் பத்தை குழந்தை இதை எப்படி விழுகியது என்று தெரியவில்லை. குழந்தையின் குழந்தையின் தொண்டைக்குள் இருந்து எடுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டு குழந்தையின் மூச்சுத் திணறலுக்கு காரணமாக இருக்கின்றது. தற்பொழுது குழந்தைக்கு தேவையான மருந்துகளும் சத்து மருந்துகளும் தரப்பட்டு வருகின்றன. 

குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். பச்சிளம் குழந்தையை பராமரிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு மூச்சு திணறலோ இருமலோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை தர வேண்டும். தவழும் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் வளர்ப்பில் கவனத்துடன் கண்பார்வையில் விலகாது வளர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.