வேலூர் பொற்கோயில் வளாகத்தில் 18 அடி உயர நடராஜர் சிலை திறப்பு
வேலூர் பொற்கோயில் வளாகத்தில் உலகிலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலையை நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா திறந்து வைத்தார்.
வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் 23 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம் 18 அடி அகலம் 15,000 கிலோ ஐம்பொன்னால் ரூ.4 கோடி மதிப்பில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செய்ய தொடங்கினார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிலை முழுமையாக செய்யப்பட்டு வேலூர் பொற்கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் பொற்கோயில் அருகே உள்ள அருகே மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது . இதனை பொற்கோயில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் பிடாதிபதி சக்தி அம்மா இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி அம்மா, “இந்திய கலாச்சாரம் பழமையும் தொன்மையும் அழகும் வாய்ந்தது. சமூகத்தில் கோவில் என்பது ரொம்ப முக்கியமானது.கோயிலுக்கு செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும். கோயிலில் தான் தெய்வீகத்தன்மை உணர முடியும்.மனித சமூகத்திற்கு கோவில் அவசியமானது. கோயிலில் நடக்கும் சமுதாய பூஜைகளுக்கும் ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் தொடர்பு உள்ளது. கோயிலுக்கு செல்லும் பொழுது நாம் தெய்வத்திற்கு கொடுத்ததை விட பல மடங்கு சக்தி அமைதி போன்றவை நமக்கு கிடைக்கிறது. சக்கரவர்த்திகளாக பல பகுதிகளை ஆண்ட ராஜாக்கள் கோயில்கள் மூலம் தான் இன்றும் பேசப்படுகிறார்கள். ராஜராஜ சோழன் பற்றி தற்போது பேசுகிறோம். அவர் கட்டிய அரண்மனை அவர் அமர்ந்த சிம்மாசனம் பற்றி தெரியாது.
வேலூர் நாராயணி பீடம் கடந்த 1992 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007 -ம் ஆண்டு ஸ்ரீபுரம் உருவாக்கப்பட்டு தங்க கோவில் அமைக்கப்பட்டது. அந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கையால் தற்போது அபிஷேகம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 9 அடி உயரத்தில் சீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1200 கிலோ வெள்ளியால் சக்தி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகில் மிக பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வழிபடும்போது ஆனந்தம் தானாக வரும். இந்த நடராஜருக்கு தனியாக கோவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டு சம்பிரதாய சாஸ்திர முறைப்படி ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அதுவரை இந்த இடத்தில் நடராஜருக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இதில் தினம் தோறும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டும் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த சிலை உருவாக காரணம் இருந்த நாராயணி பீட நிர்வாகிகள் மற்றும் இதனை செய்த அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். இந்த சிலையின் மூலம் பல பெருமைகளை கொண்ட வேலூருக்கு மேலும் ஒரு பெருமை வந்து சேர்ந்துள்ளது. இந்த திருமேனியை உலகத்திற்கு அர்ப்பணித்ததற்காக அம்மாவிற்கு மிகுந்த சந்தோசம். சன்மார்க்கம் என்று அழைக்கப்படும் ஆறு வழிபாட்டு முறைகளில் ஸ்ரீபுரத்தில் சூரிய வழிபாடு விநாயகர் வழிபாடு முருக வழிபாடு அம்மன் வழிபாடு சிவன் வழிபாடு பெருமாள் வழிபாடு ஆகியவை உள்ளன. சன்மார்க்கத்தில் உள்ள ஆறு வழிபாட்டு முறைகளில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை .அதுவும் விரைவில் அமையும்” என தெரிவித்தார்.