×

19 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்த நீர்ஜ் சோப்ரா.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலி  ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

அமெரிக்காவில்  நடைபெற்று வரும்  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்,  இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.  இந்நிலையில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதலில்  இறுதிப் போட்டியில்,  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எரிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.  முன்னதாக அவர்  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில்  தங்கம் வென்று அசத்தியிருந்தார்.  அதனைத்தொடர்ந்து  கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.   

இந்நிலையில் தற்போது  உலக தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையையும்,  வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையையும்  பெற்றுள்ளார்  நீரஜ் சோப்ரா.  கடைசியாக கடந்த 2003 ஆம் ஆண்டு  அஞ்சு பாபி ஜார்ஜ்  வெண்கலம் வென்றிருந்தார்.  அதன்பிறகு யாரும் பதக்கங்கள் பெறவில்லை. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு மீண்டும் ஓர் பதக்கம் பெற்றுகொடுத்த அவருக்கு  பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “இது திறமையான வீரர் மூலம் கிடைத்த சிறப்பான வெற்றி. உலக ஷாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள். நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம்” என்று  புகழாரம் சூட்டினார்.


அதேபோல் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது ட்விட்டர் பக்கத்தில், “நீரஜ் சோப்ரா மீண்டும் ஒருமுறை வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் 2ஆவது நபர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது” என்று  தெரிவித்துள்ளார்.


 


 

null