தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒருநாள் திருப்பதி சுற்றுலா - 7 நாட்களுக்கு முன் முன்பதிவு
சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கும் ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவை, பயணம் செய்யும் நாளில் இருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சென்னையிலிருந்து திருமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்காக ஒருநாள் திருப்பதி சுற்றுலாவை தினசரி சென்னையிலிருந்து இயக்கிவருகிறது. தற்போது சுற்றுலா பயணிகளின் விவரங்களை இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமலை தேவஸ்தானத்தின் பிரதான சர்வரில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை செயல்பட்டுவருகிறது. இந்த நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 7 நாட்களாக மாற்றம் செய்துள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் யக்கும் ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவை, பயணம் செய்யும் நாளில் இருந்து 7 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இந்த நடைமுறை வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.