×

வரும் 8-ம் தேதி ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு; பக்தர்கள் புனித நீராட தடை

 

இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி புதன்கிழமை இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவில் அன்று முழுவதும் கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்த்தக்கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக இருக்க கூடிய இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பின்பு இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி பின்னர் இராமநாதசாமி  ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது, இந்நிலையில் இராமநாதசாமி திருக்கோயில், ஆடித் திருவிழா, மாசி திருவிழா, மற்றும் ராமலிங்க பிரதிஷ்டை  திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நாளை 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இலங்கை அரசன் ராவணனுக்கு முக்தி கொடுக்கும் நிகழ்வும், அதேபோல 8-ம் தேதி தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்வும், அவனைத் தொடர்ந்து 9 ஆம் தேதி ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு இராமலிங்க பிரதிஷ்டை  திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 

இந்த ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையொட்டி வரும் 8ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜையும், அதனைத் தொடர்ந்து ஆறு கால பூஜையும் நடைபெறும்,  ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவுக்காக ராமர் எழுந்தருளி காலை 7 மணிக்கு கோதண்டராமர் கோவில் செல்ல இருப்பதால் கோவில் நடை அன்று நாள் முழுவதும் அடைக்கப்பட்டு பின்பு  பட்டாபிஷேகம் முடிந்து பின்னர் இரவு கோவில்  நடை திறக்கப்பட்டு சுவாமி கோயிலுக்கு சென்றதும், மீண்டும் இரவு கால பூஜை முடிவுற்று மீண்டும் நடை சாத்தப்படும், இதன் காரணமாக கோவில் நடை யானது அன்று ஒரு நாள் முழுவதும் சாத்தப்படும் எனவும்,  மேலும் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.