பூம்புகார் 15,000 ஆண்டுகள் பழமையானது- ஆய்வில் கண்டுபிடிப்பு
காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படும் பூம்புகார் நகரம் பண்டைய சோழர்களின் துறைமுக நகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது.
காவிரி ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் அமைந்து இருந்த இத்துறைமுக நகரம் வணிகத்தில் உலக பிரசித்திபெற்று விளங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் புதைந்த நகரம் குறித்து சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அது இருந்ததற்கான அடையாள தடயங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வுத் துறை பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளருமான ராமசாமி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வுக்குழு முதற்கட்ட அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய துணைக்கண்டத்தில் மேற்கு கடற்கரைப்பகுதியில் இருந்த துவாரகாவும், கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்த பூம்புகாரும் மிகவும் தலைசிறந்த நகரங்களாக விளங்கி இருக்கின்றன.
இவற்றில் பூம்புகார் மிகவும் தலைசிறந்த துறைமுகமாக விளங்கி கிழக்கே தொலைதூர தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும், மேற்கே எகிப்து வரையிலும் கடல் சார் வணிகத்தொடர்பு கொண்டு இருந்து இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா நிறுத்தப்பட்டு விட்ட காரணத்தால் கடல் தேவதை கோபம் கொண்டு பெரிய அளவில் அலைகளை அனுப்பி, அதனால் பூம்புகார் அழிந்தது என்று கூறியுள்ளது. இந்த கூற்று இன்று வரை நம்பப்படுவதால், பூம்புகாரின் அழிவு பற்றி இதுவரை ஆய்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. பல்வேறு அமைப்புகள் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல ஆய்வுகள் நிதிப்பற்றாக்குறையால் பாதியில் நின்றுவிட்டன.
இந்தநிலையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் பல்துறைசார் ஆய்வு மேற்கொள்ள ரூ.8.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் தலைமையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல்துறை வங்கக்கடலில் பூம்புகார் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலமும், கடல் கீழ் பகுதிகள் பல்துறைசார் கடல் கீழ் தரைமட்ட அளவு (GEBCO) மற்றும் ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு (MBES) மூலமும் ஆராயப்பட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், காவிரி டெல்டா-1 பகுதியில் உள்ள பூம்புகார் நகரம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஆய்வில் வண்டல் பகுதியில் காவிரி நதி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே இருந்து வடக்காக நகர்ந்து கொள்ளிடத்தை அடைந்தது என்ற உண்மை வெளிக்கொணரப்பட்டது. பல்துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு மூலம் நடத்திய முதற்கட்ட ஆய்வுகள் கடலுக்கு கீழே 40 கி.மீட்டர் தூரம் வரை 3 மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.
இதன் மூலம் சேகரித்த கடல் கீழ் தரைமட்டத்தின் தகவல்களை சுமார் 1000-க்கும் மேற்பட்ட வகைகளின் கணினிசார் செயலாக்கம் செய்து ஆராயப்பட்டது. அதில் தற்கால கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீட்டர் தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவில் ஒரு துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புகள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற கடற்கரை மணல் மேட்டில் சுமார் 12 கி.மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர்களுக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் காணப்படுகின்றன. இதே போன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் சுற்றுச்சுவருடன் கூடிய, ஆனால் உள்ளே உள்ள கட்டிடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை ஒருபுறம் இருக்க, இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் மயிலாடுதுறை வரை கடல் இருந்ததற்கான தடயங்களாக வடக்கு-தெற்காக 7 கடந்த கால கடலோர மணல் மேடுகளை காண்பிக்கின்றது. இவற்றில் இருந்து கடல் மட்டம் உயரும் போது கொஞ்சம் கொஞ்சமாக கடல் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாயவரத்தை அடைந்து இருக்கிறது. பின்னர் கடல் கிழக்காக பின் வாங்கும் போது சீர்காழி (5 ஆயிரம் ஆண்டுகள்), நாங்கூர் (3 ஆயிரம் ஆண்டுகள்) ஆகிய பகுதியில் சில நூறு ஆண்டுகள் நிலைகொண்டு அங்கு மணல் மேடுகளை உருவாக்கி, இறுதியாக தற்கால காவிரிபூம்பட்டினத்தை 2,500 ஆண்டுகளுக்கு முன்புள்ள கால கட்டத்தில் அடைந்து இருக்கிறது.