ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி
வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் ஆண்கள் பெண்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் காமராஜ்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த சில மாதங்களாக தொழிசாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்து மோகன் ஊதுவத்தி மாவு கலக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, சிறுவனின் கை இயந்திரத்தில் சிக்கி சிக்கியது. உடனடியாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சக தொழிலாளிகள், அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிராமிய போலீசார் விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.