×

வயநாடு மக்களுக்காக தேநீர் மொய் விருந்தில் ரூ.5,000 நிதியுதவி வழங்கிய சிறுவன் 

 

புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில்  கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற‌ பெயரில் டீ கடை நடத்தி வந்த சிவக்குமார் என்பவர் தற்போது கடந்த இரண்டு ஆண்டு காலமாக புதுக்கோட்டை அடுத்த கேப்பரை அருகே உள்ள இந்திரா நகரில் தேனீர் கடை நடத்தி வருகிறார். 

 கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தேநீர் மொய் விருந்து நடத்த திட்டமிட்ட சிவக்குமார், இன்று காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை தேநீர் மொய் விருந்து நடத்தி நிவாரணம் திரட்டி வரக்கூடிய நிலையில் அவர் கடையில் தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்களால் இயன்ற நிவாரண தொகைகளை பணமாகவும் க்யூஆர் கோடு மூலமும் வழங்கி டீக்கடை உரிமையாளர் சிவகுமாரை பாராட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சபரி என்பவர் சிங்கப்பூரில் உள்ள அவரது தந்தை அறிவுறுத்தலின்படி அவர் கொடுத்த பணத்தையும் சபரி சேமித்து வைத்திருந்த பணம் என மொத்தமாக சேர்த்து 5000 ரூபாயை வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியாக தேநீர் மொய் விருந்தில் அவரது பாட்டியுடன் கலந்து கொண்டு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இன்று தனது கடையில் தேனீர் குடிப்பவர்களிடமும் மற்றும் பலகாரம் உண்ணுபவர்களிடமும் எந்த ஒரு தொகையும் வாங்காமல்  வயநாடு நிலைச்செறிவில் சிக்கி உடமைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உதவி கரம் நீட்ட நிவாரணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் இன்று முழுவதும் வசூலிக்கப்படும் என்றும் தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இன்று பத்து ரூபாய் மதிப்புள்ள தேனீரை குடித்துவிட்டு நூறு ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அவர்களால் இயன்ற உதவிகளை செய்து தனக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ள சிவக்குமார் இந்த தேநீர் மொய் விருந்தில் அதிக நிதி வசூல் ஆனால் தானே நேரடியாக வயநாட்டிற்குச் சென்று உதவி செய்ய உள்ளதாகவும் இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்திடம் இங்கு வசூல் ஆகும் நிதியை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.