உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலினின்படி, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் இன்று (08.03.2024) ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
தொழில்துறையில், இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே. அயராது உழைத்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். இன்று சிப்காட் நிறுவனம் 18 மாவட்டங்களில், சுமார் 39,225 ஏக்கர் பரப்பளவில், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 30 தொழில்பூங்காக்களை உருவாக்கி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்படத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
மேலும் இந்த ஆண்டிற்குள் 10 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே சிப்காட் நிறுவனத்தின் நோக்கமாகும். இதனை தொடர்ந்து உலக மகளிர் தினத்தையொட்டி, இன்று சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள நாவலூர் ஏரி பகுதியில், சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரு. கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இயக்குநர் திரு. ஆ.ர. ராகுல்நாத் இ.ஆ.ப., ஆகியோர் 1000 மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதே போன்று அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் அம்மாவட்ட பெண் ஆட்சியர் அவர்களோ அல்லது அம்மாவட்ட அளவிலான பெண் உயர் அலுவலர்களின் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம், தமிழ்நாட்டில் பசுமைப் பொலிவினை ஏற்படுத்தவும். காற்று மாசுபாட்டினை குறைக்கவும் வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.