×

மது குடிக்க பணம் தராததால் இரும்பு கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த குடிமகன்

 

சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் சங்கு ஒலிக்கும் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது உறவினர் சின்னாளப்பட்டியில் வசித்து வருகிறார். பொன்ராஜ் கேரளா மற்றும் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம்  சின்னாளபட்டி உறவினர் வீட்டுக்கு வந்து செல்வதை பொன்ராஜ் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில்,  வழக்கம்போல உறவினரை  பார்ப்பதற்காக பொன்ராஜ் சின்னாளப்பட்டி பேருந்து  நிலையத்திற்கு குடிபோதையில் வந்துள்ளார். அங்கு சகஜமாகத்தான் இருவருமே பேச தொடங்கியுள்ளனர். நேரம் ஆக, ஆக பொன்ராஜ் போதை தலைக்கேற குடிப்பதற்கு உறவினரிடம் 20-ரூபாய் பணம் கேட்டுள்ளார்  பொன்ராஜ், அவர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்த பொன்ராஜ் பேருந்து நிலையத்தில் சங்கு ஒலிப்பதற்காக நிறுவப்பட்டிருந்த டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். டவரிலேயே பல சர்க்கஸ் செய்தபடி இருந்துள்ளார் பொன்ராஜ். பொன்ராஜ் உறவினரும் மனமிறங்கி சரக்கு வாங்கி தரேன் கீழே வாடா என்று சொன்ன தகவல் பொன்ராஜ் காதுகளுக்கு எட்டவில்லை. அவரது அட்டகாசம் தொடர்ந்தது. தகவல் அறிந்து வந்த சின்னாளப்பட்டி போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே  இறங்கச் செய்து பேருந்து நிலைய பணியாளர் ஒருவருடன் இருக்கர வாகனத்தில் ஏற்றி  வாடிப்பட்டிக்கு அனுப்பி வைத்தனர்.