சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் கோவை போலிசாரால் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமின் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, 2 நாட்களுக்கு கஞ்சா வைத்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான கோயம்புத்தூர் உட்பட்ட அனைத்து வழக்குகளிலும் தற்போது ஜாமீன்கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட கஞ்சா வழக்கில் அவர் மீது குண்டாஸ் போடப்பட்டதைஎதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த சில தினங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருக்கிறது.