×

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..! திருவள்ளூரில் பரபரப்பு

 

சென்னை அருகே திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன்(38).இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில், ஜெகனின் வீட்டுக்கு 2 இரு சக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்த 5 பேர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.அப்போது வீட்டில் துணை தலைவரும், ஜெகனும் இல்லாததால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஒடியுள்ளனர். வெடிகுண்டு வீசி விட்டு அந்த மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது. இது குறித்து திமுக பிரமுகரான ஜெகன், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தொழில் போட்டி காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திமுக பிரமுகர் ஜெகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய அதே நபர்கள், சிறுனியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டுக்குள் புகந்த அந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது கார் மற்றும் தண்ணீர் கேன் வாங்க வந்தவர்களின் கார்களையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். வீட்டின் ஜன்னல்களை அரிவாளால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் சேதப்படுத்தி, எப்படி வளர்ந்து விடுகிறீர்கள் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டை வீசிய அந்த கும்பல், சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் எனவும், ரவுடிகள் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசினார்களா எனவம் , எனினும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.